தொழிலாளர் பிரச்னைக்கு உடனடி தீர்வு : அமைச்சர் சிவராம்ஹெப்பார் உறுதி

பெங்களூரு: ராம்நகர் டொயோட்டா கிர்லோஸ்கர் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் அரசின் புதிய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சரத்பச்சேகவுடா உள்ளிட்ட  பல்வேறு தலைவர்கள் இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டாலும் அரசு மற்றும் கார் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களின்  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்  பேரவையில்  பாஜ உறுப்பினர் கருணாகர ரெட்டி இந்த பிரச்னை குறித்து  பேசியதாவது: டொயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர்களின்  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில்  அக்கறை இன்றி செயல்படுகிறது. மாநில அரசும் இதை  கண்டு கொள்ளவில்லை. சம்பளம் இன்றி வீதிகளில் தொழிலாளர்கள் 86 நாளை கடந்து  போராட்டம் நடத்தி வருவதற்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில பாஜ தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. கோலாரில் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய பாஜ அரசு டொயோட்டா தொழிலாளர்களின்  நியாயமான  கோரிக்கையை புறக்கணித்துள்ளது. குளிர், வெயில் என தொழிலாளர்கள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மாநில அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நீதி  கிடைக்கச்செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் போதும்போது:`` டொயோட்டா தொழிலாளர்களின் பிரச்னைக்கு குறித்து முதல்வர் எடியூரப்பாவுடன்   ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காணப்படும்’’ என்றார்.

Related Stories: