அணைக்கட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம் விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய ராணுவ வீரருக்கு தர்மஅடி: போலீசில் ஒப்படைப்பு

அணைக்கட்டு:  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் அடுத்த மலைசந்து பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி(50). விவசாயி. இவர்  நேற்று பகல் 12 மணியளவில் தனது குடும்பத்தினருடன் அருகே உள்ள விவசாய நிலத்தில் பணி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று அவ்வழியாக வந்த சிலர் ராஜாமணியிடம், யாரோ உங்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். உடனே  ராஜாமணி குடும்பத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பைக்கில் ஏறி தப்பி செல்ல  முயன்றார். இதைபார்த்த அவர்கள் திருடன், திருடன் என கூச்சலிட்டனர். அப்போது, அந்த வாலிபர் பைக்கில் வேகமாக செல்ல முயன்றபோது தடுமாறி கீழே  விழுந்தார். உடனே ராஜாமணி அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அணைக்கட்டு  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், கார்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டனர். பின்னர், விசாரணையில், தப்ப முயன்றவர் வேலூர் தாலுகா சோழவரம் கிராமத்தை பன்னீர்செல்வம் எனவும், ராணுவ வீரரான இவர் விடுமுறையில்  ஊருக்கு வந்த 2வது நாளிலேயே ராஜாமணியின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, நேற்று அவரது வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து,  பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ஒருஜோடி கால் கொலுசு, ₹7 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி கொண்டு பைக்கில் தப்பி செல்ல  முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ராணுவ வீரர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரே விவசாயி வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் சிக்கி கைதாகியிருக்கும் சம்பவம்  அணைக்கட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: