மருத்துவர்கள் பதிவை டிஜிட்டல் மயமாக்க கட்டணம், அபராதம் விதிப்பை எதிர்த்து வழக்கு

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களின் பதிவை டிஜிட்டல் மயமாக்குவதற்காகவும், புதுப்பிக்கவும் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும், பிப்ரவரி 1ம் தேதிக்குள் புதுப்பிக்க தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கவுன்சிலின் முன்னாள் தலைவர் பி.பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தலைவர் செந்தில் தலைமையிலான நிர்வாகிகள் மருத்துவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், நிதியை பெருக்குவதிலேயே குறியாக உள்ளனர். எனவே, மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் சி.கனகராஜ் ஆஜராகி, அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில சுகாதார துறை, தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவை 3 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Related Stories: