சசிகலாவின் காரில் அதிமுக கொடியை பொருத்த அனைத்து உரிமையும் உண்டு; எந்த சர்ச்சையும் இல்லை: சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலா குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார். மருத்துவமனை வாயிலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று சசிகலாவை வரவேற்றனர். இதனை தொடர்ந்து பெங்களூரு பகுதியான தேவனஹள்ளி அருகே கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தாங்கினார். பண்ணை வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்கு பிறகு தமிழகம் திரும்ப சசிகலா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் சசிகலா காரில் பொருத்தப்பட்டிருந்த அதிமுக கொடி குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்ககவே அமமுக தொடங்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொது செயலாளர்தான். அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்பதால்  பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் இருக்கிறது. சட்டப்போராட்டம் தொடரும். சசிகலாவை ஒரு வாரம் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் எனவும் கூறினார்.

Related Stories: