உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக வேண்டும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவிப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக வேண்டும் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என்று தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்டது. முதல்- அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்ட போதிலும் தே.மு.தி.க. அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தே.மு.தி.க. பிடிவாதம் காட்டி வருகிறது. அதை அ.தி.மு.க. கண்டு கொள்ளாமல் தே.மு.தி.க.வை கொஞ்சம் விட்டுபிடிக்கலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது. எனவே தே.மு.தி.க.வுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. இதுவரை தொடங்கவில்லை. அதே நேரத்தில் பா.ம.க., பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 41 இடங்களை எதிர்பார்க்கும் நிலையில் அந்த கட்சிக்கு 10 இடங்களை மட்டுமே ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

குறைந்த அளவு தொகுதிகளை ஏற்க தே.மு.தி.க. தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் , அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த அறிவிப்பார் என்றார். இக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,  துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் 234 தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் என மொத்தம் 320 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: