ஜெயலலிதா நினைவிட திறப்புக்கு அதிமுகவினர் குவிந்ததால் சென்னையில் 13 கோடிக்கு மது விற்பனை: தமிழகத்தில் ஒரே நாளில் 292 கோடியை அள்ளியது டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு மற்றும் தைப்பூசம் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே நாளில் 292.47 கோடிக்கு மதுவிற்பனை நடந்ததாக டாஸ்மாக் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 930 டாஸ்மாக் கடைகளும், சென்னை மாவட்டத்தில் மட்டும் 320 கடைகளும் செயல்படுகின்றன. இந்நிலையில், மெரினாவில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் சென்னைக்கு படையெடுத்தனர்.

இதனால், மெரினா, வாலாஜா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை ஆகிய பகுதிகள் முழுவதும் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக, 27ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை களைகட்டியது. குறிப்பாக, சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை, சென்ட்ரல், ஆயிரம் விளக்கு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா பரவல் அச்சம் ஏதும் இல்லாமல் முண்டியத்துக்கொண்டு மதுவகைகளை வாங்கிச்சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் தங்களுக்கு தேவையான மதுவகைகளை பெட்டி பெட்டியாக வாங்கிசென்றனர்.

இதன் மூலம், 27ம் தேதி சென்னை மாவட்டத்தில் மட்டும் 12.75 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அதன்படி, மத்திய சென்னை 4.20 கோடி, தென் சென்னை 4.37 கோடி, வட சென்னை 4.18 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் மொத்தமாக 42.32 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. வழக்கமாக, ₹30 கோடி முதல் 35 கோடி வரையில் மட்டுமே சென்னை மண்டலத்தில் மதுவிற்பனையாகும். ஆனால், 27ம் தேதியன்று மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல், தைப்பூசத்தை முன்னிட்டு 28ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மற்ற டாஸ்மாக் மண்டலங்களிலும் 27ம் தேதி வழக்கத்தை விட அதிகமாக மது விற்பனையானது. அந்தவகையில், மதுரை மண்டலத்தில் 70.27 கோடி, சென்னை மண்டலம் 42.32 கோடி, திருச்சி மண்டலம் 63.50 கோடி, சேலம் மண்டலம் 58.82 கோடி, கோவை மண்டலம் 57.56 கோடி என தமிழகத்தில் கடந்த 27ம் தேதி மொத்தமாக 292.47 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. பல டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கேட்ட மதுவகைகளை தர முடியாத நிலையும் ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: