பாதாள சாக்கடை குழிகள் மூடாததை கண்டித்து பாளையில் பொதுமக்கள் திடீர் மறியல்

கேடிசி நகர் :  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடாததை கண்டித்து பாளையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாளை மனகாவலம்பிள்ளைநகர் அம்பேத்கர் காலனியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தன. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகி ஆட்கள் நடமாட முடியவில்லை. மேலும் அங்குள்ள கழிவுநீர் தொட்டிகளும் மூடப்படவில்லை.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பாளை- திருச்செந்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சீரமைப்பதாக கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து ராமமூர்த்தி கூறும்போது, 3 மாதங்களாக குழிகள் மூடப்படாமல் உள்ளது.

இதனால் மழை காலத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இங்குள்ள 3 கழிவுநீர் தொட்டிகளுக்கும் மூடி இல்லை. இதுகுறித்து கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே பாதாள சாக்கடை குழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: