மெட்ரோ ரயிலில் அனைத்து இருக்கையிலும் பயணிகள் அமர அனுமதி

பெங்களூரு: மெட்ரோ ரயிலில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நம்ம மெட்ரோ ரயிலில் சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே பயணிகள், நின்றபடி பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் மத்திய அமைச்சகத்திடம் இதுகுறித்து தெரிவித்தோம். தொடர்ந்து பயணிகள் அனைத்து இருக்கைகளிலும் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் அஜேய் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ``தற்போது வார நாட்களில் சுமார் 1.4 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். 2020-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதிக்கு முன்னர் சுமார் 5 லட்சம் பேர் பயணித்தனர். கொரோனா தொற்று காரணத்தினால் இடையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து மீண்டும் சேவை தொடங்கப்பட்டது. இருக்கைக்கு இடையில் ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. தற்போது பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் நிற்க வேண்டியுள்ளது.

எனவே இதுகுறித்து மத்திய அமைச்சத்தில் தெரிவித்து அனைத்து இருக்கையிலும் அமர அனுமதி பெற்றுள்ளோம். இந்த விதி முறையை தவிர மற்ற அனைத்து விதிமுறைகளும் கட்டாயம் கடைபிடிக்கப்படும். கூட்டம் அதிகரித்தாலும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை’’ என்றனர். தொடர்ந்து பயணிகள் கூறுகையில், ``பேருந்துகளில் கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. அங்கு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஆனால் மெட்ரோ ரயிலில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. தொடர்ந்து அதிக ரயில்கள் இல்லாததால் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தள்ளனர்.

Related Stories: