விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடிகர் தீப் சித்துவை பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்திய பாஜனதா: ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியில் குழப்பத்தை உருவாக்க பாஜ கட்சி தனது கைக்கூலியாக நடிகர் தீப் சித்துவை பயன்படுத்தி சதிசெய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறையின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள், போலீசாரின் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு போலிசார் அமைத்த தடுப்புகளை உடைத்தெறிந்து மத்திய டெல்லிக்குள் பிரவேசித்தனர். செங்கோட்டை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் அங்கு சீக்கிய கொடியினை பறக்கவிட்டனர். இதனால் வன்முறை களமாக மாறிய டெல்லியில் பலர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், விவசாயிகளின் அணிவகுப்பில் ஏற்பட்ட வன்முறைக்கு பின்னால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகர் தீப் சித்து இருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், நடிகர் தீப் சித்துவை களமிறக்கி வன்முறையை தூண்டியதாக பாஜ மீது ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சதா நேற்று செய்தியாளர்களை சந்தித்திப்பின்போது நடிகர் தீப் சித்து மற்றும் பாஜவுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பி கூறியதாவது: நடிகர் தீப் சித்து பல்வேறு பாஜ தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எனவே, பாஜவின் கைக்கூலியாக தீப் சித்துவை பயன்படுத்தி, விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், செங்கோட்டையில் சீக்கிய கொடியினை போராட்டக்காரர்கள் பறக்கவிட்டபோது அவர்களுடன் தீப் சித்துவும் இருந்துள்ளார்.

மேலும், 2019 மக்களவைத் தேர்தலின் போது பஞ்சாபில் உள்ள  குர்தாஸ்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டபோது அவர் தியோலின் உதவியாளராக  இருந்தார். ஆனால், இப்போது பாஜக எம்.பி.யாக இருக்கும் தியோல், தீப் சித்து விவசாயிகளின்  போராட்டத்தில் இணைந்த பின்னர் அவரிடமிருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து விலகியிருந்தார்.  செங்கோட்டையில் போராட்டக்காரர்களால் பறக்கவிடப்பட்ட கொடியானது, அனைத்து குருத்வாராக்கிளிலும் பறக்கும் கொடியாகும். மேலும், இந்த கொடியை டிராக்டர் பேரணியின் போது போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் பறக்கவிட்டதை ஆதரித்து பேசிய தீப் சித்து, போராட்டக்காரர்கள்  தேசியக் கொடியை அகற்றவில்லை என்றும்,  ‘நிஷான் சாஹிப்’ ஒரு அடையாள ஆர்ப்பாட்டமாக முன்வைத்ததாகவும் தெரிவித்து ஆதரவு தெரிவித்தார். இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

Related Stories: