பல நகரங்களில் ரூ.90ஐ தாண்டியது பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதத்தில் ரூ.2.50 உயர்வு

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதம் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 வரை அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மிக அதிகபட்சமாக, ஜெய்ப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.72க்கும், மும்பையில் ரூ.92.86க்கும் விற்கப்பட்டது. சென்னையில் முந்தைய நாள் விலையை விட நேற்று, 22 காசுகள் அதிகரித்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.88.82க்கும், டீசல் ஒரு லிட்டர் 24 காசு அதிகரித்து, ரூ.81.71க்கும் விற்கப்பட்டது.

இதுவே, சேலத்தில் பெட்ரோல் ரூ.89.24க்கும், டீசல் ரூ.82.15க்கும் விற்பனையானது. பெரும்பாலான நகரங்களில் ரூ.90க்கும் அதிகமாக பெட்ரோலும், ரூ.84க்கு அதிகமாக டீசலும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் கடலூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.90ஐ பெட்ரோல் விலை எட்டியுள்ளது. நாடு முழுவதும் நடப்பு மாதம் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 வரை அதிகரித்துள்ளது. சேலத்தில் கடந்த 1ம் தேதி பெட்ரோல் ரூ.86.94க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.2.30 அதிகரித்து ரூ.89.24 ஆக உயர்ந்துள்ளது. டீசல், கடந்த 1ம் தேதி ரூ.79.66க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.2.49 அதிகரித்து ரூ.82.15 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: