டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் கைது: அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய தமிழக விவசாயிகளை தாக்கியும் கைது செய்தும் உள்ள தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற கூட்டணியை சேர்ந்த திமுக - காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்நிலையில், நேற்று இரவு 1.30 மணிக்கு கொரடாச்சேரியில் உள்ள துரைவேலன் வீட்டு சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் அவரது வீட்டுக் கதவை தட்டி, கைது செய்ய முற்பட்டனர். தற்போது பூண்டி கலைவாணன், துரைவேலன் உள்ளிட்ட பத்து பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ): டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர், இருசக்கர வாகன பேரணில் ஈடுபட்டதாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், விவசாயிகள் போராட்டத்தையொட்டி போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): திருவாரூரில் போராடிய விவசாயிகள் 200கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி, அரசுப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் என பல்வேறு பிரிவுகளில், பிணையில்லாத வழக்குகள் போட்டு கைது செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சட்ட மீறலின் மூலம் ஜனநாயக உரிமைப் போராட்டங்கள் ஒரு போதும் அடங்கிவிடாது என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் உள்பட பலர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: