ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் இறப்பு மர்மம் குறித்து விசாரணை கேட்ட ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் சுப.சிவப்பிரகாசத்தின் பேரனும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளருமான இலக்குவன்- சவுமியா மேகா திருமணம் கிண்டியில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த திருமணம் மிகவும் இனிமையாக, எளிமையாக, நாமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில், ஒரு சீர்திருத்தத் திருமணமாக நடந்திருக்கிறது. இன்றைக்கு ஒரு முக்கியமான நாள். திருமணம் நடந்திருப்பது என்பது இவர்களுக்கு ஒரு முக்கியமான நாள்.

அதேநேரத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்றைக்கு நடக்கிறது. குற்றம் புரிந்து, ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுத் திறப்பு விழா நடக்கின்றது. அதனைத் திறந்து வைப்பவர் உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சொல்லி, அவருடைய ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கின்ற காரணத்தினால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இது தான் இன்றைய நிலை.

ஜெயலலிதா மறைந்து  கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிறது. அவர் எப்படி மறைந்தார் என்பது தொடர்பாக ஒரு தர்மயுத்தம் நடந்தது. விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தத் தர்மயுத்தம் நடைபெற்றது. அது நடைபெற்று 48 மாதங்கள் ஆகியது. அதன்பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 42 மாதங்கள் ஆகியது. விசாரணை வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் கேட்டார். அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுத்து 25 மாதங்கள் ஆகிறது. பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவர் செல்லவில்லை.

இந்த லட்சணத்தில் ஆறுமுகசாமி கமிஷனுக்கு பத்தாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து 4 ஆண்டு ஆகிறது. இதுவரை உண்மை வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறது. விழாக்களில் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் எவ்வாறு மறைந்தார் என்பது இதுவரையில் மர்மமாக உள்ளது. இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா என்பது தான் என்னுடைய கேள்வி.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: