அமைச்சர் பாண்டியராஜனை நீக்கக் கோரி தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து திடீர் போராட்டம்: ஆவடி அதிமுகவினர் நடவடிக்கையால் பரபரப்பு

சென்னை: அமைச்சர் பாண்டியராஜனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து ஆவடி பகுதி அதிமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன் முதல்வர், துணை முதல்வர், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேர்தலில் அதிமுகவினர் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்தார்.

ஆனாலும், பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் உள்கட்சி மோதலை அரங்கேற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எல்ஏக்கள் அதிமுக கட்சியின் 2ம் மற்றும் 3ம்கட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையை கண்டுகொள்வதே இல்லை. கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றால் கட்சியினரிடம் கூட பணம் வாங்கிக் கொண்டுதான் செய்வதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அதேபோன்று, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்களை நீக்கி விட்டு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆவடி நகராட்சி பகுதி அதிமுகவினர் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென சுமார் 100 வேன்களில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து, அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதுகுறித்து ஆவடி நகராட்சியை சேர்ந்த சுல்தான் நிருபர்களிடம் கூறும்போது, ”திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். கட்சிக்கு பல ஆண்டுகளாக சேவை செய்தவர்களை மதிப்பதே இல்லை.

ஆவடி நகராட்சி பகுதியில் உள்ள 48 வார்டுகளிலும் தங்களது ஆதரவாக செயல்படுபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மற்றும் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அவர்களுக்கு புதிதாக பதவி வழங்கி உள்ளனர். ஏற்கனவே கட்சியில் இருந்தவர்கள் மற்றும் அதிமுகவுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களிடம் இருந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பாண்டியராஜன், அலெக்சாண்டர் ஆகியோர் கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக வெற்றிபெற முடியாத சூழ்நிலை ஏற்படும். ஜெயலலிதாவால் பதவி வழங்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Related Stories: