நேதாஜியின் அடிச்சுவட்டில் பலமான இந்தியா உருவாகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

கொல்கத்தா: ‘எல்லை கட்டுப்பாடு கோடு முதல் அசல் எல்லை கட்டுப்பாடு வரை, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அடிச்சுவடை இந்தியா பின்பற்றுகிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாமில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்வீக குடும்பங்களுக்கு அவர்களுக்குரிய நிலப்பட்டா இல்லாமல் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளில் இவர்களில் 2 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சிவசாகர் மாவட்டத்தில் நடந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, மேலும் ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இதற்கு முந்தைய அரசுகள் பூர்வீக மக்களின் நில உரிமையை பாதுகாப்பதில தவறி விட்டதாக குற்றம் சாட்டினார்.

அதன் பின்பு, அங்கிருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்ற அவர், நேதாஜியின் 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசியதாவது: எல்லை கட்டுப்பாடு கோடு முதல் அசல் எல்லை கட்டுப்பாடு கோடு வரை, வலிமையான இந்தியா உருவாக வேண்டும் என்று நேதாஜி விரும்பினார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால், அவரது அடிச்சுவடை பின்பற்றி வலிமையான இந்தியா உருவாகி வருவதை கண்டு பெருமைப்பட்டு இருப்பார். அதே போன்று, நாட்டின் இறையாண்மை சவாலை எதிர்கொள்ளும் போது தக்க பதிலடி கொடுக்கப்படுவதையும், கொரோனா தொற்றுக்கு எதிராக உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி பயன்படுத்தப்படுவதையும் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார். இப்படியொரு வலிமையான, புதிய இந்தியா உருவாவதை அவர் பார்த்தால் என்ன நினைத்திருப்பார் என்று அடிக்கடி யோசிப்பது உண்டு. நாட்டிற்கு வலிமை சேர்க்கும் வகையில் தேஜஸ், ரபேல் உள்ளிட்ட புதிய ரக போர் விமானங்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

* மம்தா பேச மறுப்பு

விக்டோரியா நினைவு அரங்கில் நடந்த இந்த விழாவில், பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். அவர் பேச தொடங்குவதற்கு முன்பே கூட்டத்தில் இருந்த ஒரு பகுதியினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா, ‘‘விழாவுக்கு அழைத்து விட்டு இதுபோல் என்னை அவமானப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது அரசு விழா. கட்சி நிகழ்ச்சி அல்ல. அதற்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். விழாவுக்கு அழைக்கப்பட்டு இது போன்று அவமானப்படுத்தப்படுவதை யாரும் விரும்புவதில்லை. எனவே, இந்நிகழ்ச்சியில் நான் பேசப் போவதில்லை. மேற்கு வங்கம் வாழ்க, வாழ்க பாரதம்,” என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார்.

Related Stories: