போயஸ் கார்டனில் வேதா இல்லம் ஜன.28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு: ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான்: அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய தமிழ் புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக விற்பனை அரங்கத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான். அந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன.

இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வருகிற 28-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதுதவிர ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அம்மா அறிவு மையம் மற்றும் அருங்காட்சியகம் உருவெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அம்மா நினைவிடம் வருகிற 27-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தை சென்னைக்கு வரும் மக்கள் பார்த்து செல்லக்கூடிய ஒரு கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கும்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா இல்லத்தில் அவரை கவர்ந்த சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளும் வேதா இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதாவின் நினைவு இல்லம் எல்லோரும் காணவேண்டிய இடமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேடை நிகழ்ச்சியின் போது, 28-ந்தேதி வேதா இல்லம் திறக்கப்படும் என்று பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து நிருபர்களிடம் தெரிவிக்கும்போது, வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறியுள்ளார். சென்னை மெரினாவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகிற 27-ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர் க.பாண்டியராஜ் தெரிவித்தபடி, அதற்கு மறுநாள்  வேதா இல்லம் திறக்க இருக்கும் தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories: