பாலம் கட்டுவதில் தாமதம் மழை வெள்ளத்தில் கிராம மக்கள் நீந்தி ஊருக்கு செல்லும் அவலம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அறந்தாங்கி : மணமேல்குடி அருகே சாலை வசதி இல்லாததால் தண்ணீரில் நீந்தி ஊருக்கு செல்ல வேண்டிய அவலநிலையில் கிராம மக்கள் உள்ளனர். எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் அரசியல் குருவாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும், சுதந்திர போராட்ட தியாகியாகவும் விளங்கிய தீரர் சத்தியமூர்த்தியின் பூர்வீகத்தின் வாழ்ந்த ஊராக ஆவுடையார்கோவிலை அடுத்த செம்மனாம்பொட்டலை அருகில் உள்ள குடுவையூர் விளங்கி வருகிறது.

இன்றும் தீரர் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் வழிபடும் குலதெய்வம் குடுவையூரில் உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அடிக்கடி இங்கு வந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.ஒரு பெரும் அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட தியாகிக்கு தொடர்புடைய குடுவையூர் மக்கள் இன்று தங்கள் ஊருக்கு கழுத்தழவு தண்ணீரில் நீந்தி செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

மணமேல்குடி ஒன்றியம் குடுவையூரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு ஆவுடையார்கோவிலில் இருந்து கோட்டைப்பட்டினம் செல்லும் சாலையில் சென்று குடுவையூர் ஆலங்கன்னு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும். மெயின் ரோட்டில் இருந்து குடுவையூருக்கு செல்ல, அவ்வழியே செல்லும் தண்ணீர் செல்லும் வாழியை கடந்தே செல்ல வேண்டும். மழைக்காலங்களில் வாரியில் தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்துடனே ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம் குறித்து தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக தமிழக அரசு குடுவையூர் செல்லும் சாலை அமைக்க சுமார் ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தன. குடுவையூர் சாலையை, கோட்டைப்பட்டினம் மெயின் சாலையுடன் இணைக்க பாலம் அமைக்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், தற்போது அப்பகுதியில் பாலம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டும்பணியை தொடங்க முடியாத நிலையில் சாலை அமைக்கும் பணி 50 சதவீதத்திற்கு மேல் நடைபெற்று, மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

குடுவையூருக்கு சாலை அமைக்கப்பட்ட போதிலும் பாலம் அமைக்காவிட்டால், சாலைஅமைத்தும் எந்தவித பயனும் அந்த ஊர் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. குறிப்பாக சமீபத்தில் பெய்த தொடர்மழையின் காரணமாக குடுவையூருக்கு செல்லும் வழியில் உள்ள வாரியில் அதிகஅளவு தண்ணீர் செல்லவதால், அப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாணவ,மாணவியர் ஊரில் இருந்து வெளியூருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மக்கள் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி ஊருக்கு சென்று வந்தனர்.

தற்போது தண்ணீரின் அளவு குறைந்துள்ளபோதிலும், இடுப்பளவு தண்ணீரில் சென்று வருகின்றனர். பெண்களின் நிலைதான் கொடுமை, வெளியூர் சென்றாலும், வெளியூர்களில் இருந்து ஊருக்கு திரும்பினாலும், அவர்கள் தண்ணீரில் நனைந்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>