கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ராகிணி திவேதி 140 நாட்களுக்கு பின் ஜாமீனில் விடுதலை

பெங்களூரு: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 140 நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதியை

ஜாமீனில் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதை பொருள் புழக்கத்தில் விடும் புகாரில் 20க்கும் மேற்பட்டவர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வா மகன் ஆதித்யாஆல்வா, கேரளா மாநில முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் மகன், கன்னட திரைப்பட நடிகைகள் சஞ்சனாகல்ராணி, ராகிணி திவேதி உள்பட பலர் அடங்குவர்.ேபாதை பொருள் வழக்கில் நடிகை ராகிணியை கடந்தாண்டு செப்டம்பர் 4ம் தேதியும் சஞ்சனகல்ராணியை செப்டம்பர் 8ம் தேதி சிசிபி போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின், கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு ஏசிஎம்எம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகைகள் சஞ்சனாகல்ராணி மற்றும் ராகிணி திவேதி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின் இருவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை ஆதாரமாக வைத்து சஞ்சனாகல்ராணியை கடந்த டிசம்பர் 11ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகிணி திவேதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அம்மனு நீதிபதி ரோஹின்டன் நாரிமன் அமர்வு முன் விசாரணை நடந்தது. ராகிணி சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூர்த் ஆஜராகி வாதம் செய்தார். இதற்கு மத்திய அரசின் சாலிசிடர் ஜெனரல் ஆட்சேபனை தெரிவித்து வாதம் செய்தார். இரு தரப்பு வாதம் கேட்டபின், ராகிணியை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 140 நாட்களுக்கு பிறகு ராகிணி விடுதலையாகிறார்.

Related Stories: