3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிபந்தனை இன்றி திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ”மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, அ.ராசா, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, இளைய அருணா, மயிலை த.வேலு உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தமிழகம் எங்கும் வெற்றிகரமாக திமுக  நிர்வாகிகள் நடத்தினர். மாநிலம் முழுவதும் 21,500-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் - வார்டுகளிலும் இக்கூட்டங்களை நடத்தி, மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்துள்ள ஒரே இயக்கம், திமுக மட்டும்தான். இந்தக் கூட்டங்களில் “வேலைவாய்ப்புகள் இல்லை, அடிப்படை வசதிகள் செய்யவில்லை, உள்கட்டமைப்புகளைப் பெருக்கும் பணிகளே நடக்கவில்லை, அத்தியாவசியத் தேவைகளுக்கான பணிகள் ஏதும் இல்லை - எங்கும் ஊழல், லஞ்சம் - எல்லா மட்டத்திலும் ஊழல், கொள்ளை” என்று கட்சி வித்தியாசமின்றி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், அதிமுக ஆட்சியின் அவலத்தைச் சுட்டிக்காட்டி, ஒரு கோடியே 5 லட்சம் தமிழ் மக்கள் இந்த “மக்கள் கிராம சபை”க் கூட்டங்கள் வாயிலாக, “அ.தி.மு.க.வை நிராகரிகத்துள்ளதை” - ஜனநாயகத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் பக்கங்களில் தனிமுத்திரை பதிக்கும் நிகழ்வு. இக்கூட்டங்களில் பங்கேற்ற தலைவர் மு.க.ஸ்டாலின், வேளாண் கடன், மாணவர்களின் கல்விக்கடன், 5 பவுன் வரை நகைக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வோம் என்றும் - மக்களின் பொதுவான கோரிக்கைகள் அனைத்தும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றித் தரப்படும்.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மக்களுக்கு பொறுப்புடன் தொண்டூழியம் செய்திடும் நல்லாட்சியை-திறமையானதும், வெளிப்படையானதும், ஊழலற்றதுமான ஆட்சியை அமைத்திடவும், திமுக தலைவரை முதலமைச்சராக்கிடவும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.

* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உள்ள முக்கியக் குற்றவாளிகளை, உடனடியாக சி.பி.ஐ கைது செய்ய வேண்டும்.

* உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில்-மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயப் பெருமக்கள் நடத்தும் டெல்லி முற்றுகைப் போராட்டம் 58வது நாளாக நடைபெற்று வருகிறது. சுதந்திர இந்திய வரலாறு இதுவரை கண்டிராத இத்தகைய மாபெரும் போராட்டத்திற்குப் பிறகும்-விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று சட்டங்களையும் ஆதரித்து வெட்கமின்றிப் பேசி வரும் முதல்வர் பழனிசாமிக்கும் இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில்-மூன்று வேளாண் சட்டங்களையும் பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும்.

* பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் என்பதை ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கிட வேண்டும்.

*  ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ளாமல், தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடத்தி உள்ளார். இதுதொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், “ஆளுநரின் இந்த காலதாமதம் அசாதாரணமானது” என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதிகளே கருத்து தெரிவித்துள்ள நிலையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்குப் பதில் ஆளுநரே இன்னும் மூன்று நாட்களில் முடிவெடுப்பார்” என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஆகவே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்து  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக ஆளுநரை, மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: