வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு: மத்திய அரசு யோசனையை விவசாயிகள் நிராகரித்தனர்

புதுடெல்லி: டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இச்சட்டங்களை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைப்பதாகவும், அதற்குள் இருதரப்பு கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவை எட்டலாம் என்றும் மத்திய அரசு யோசனை கூறியது. இந்த கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யும் வரை போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தது.  இது குறித்து ஆலோசித்து முடிவை கூறுவதாக வந்த விவசாய சங்க பிரதிநிதிகள், நேற்று இது பற்றி ஆலோசித்தனர். அதில், மத்திய அரசின் யோசனையை நிராகரிப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற குழு ஆலோசனை: வேளாண் சட்டங்களை ஆராயவும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் 4 பேர் கொண்ட சிறப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் இருந்து பூபிந்தர் சிங் மான் திடீரென விலகினார். மற்ற 3 பேருடன் உள்ள இந்த குழு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, தமிழ்நாடு, மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 8 மாநிலங்களின் 10 விவசாய அமைப்புகளுடன் காணொலி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தியது.

Related Stories: