அரசியல் காரணத்துக்காக வதந்திகள் பரப்பக் கூடாது: சுகாதார அமைச்சர் வர்தன் வேண்டுகோள்

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசிகள் பற்றி அரசியல் காரணத்துக்காக தவறான தகவல்களை பரப்பக் கூடாது,’ என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி தொடங்கி வைத்தார். கடந்த 6 நாட்களில் நேற்றைய நிலவரப்படி, 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாக, பெரும்பாலான முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயங்குகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “போலியோ, அம்மை நோய்கள் மக்கள் பெருமளவில் தடுப்பூசி போட்டு கொண்டதினால் தான் ஒழிக்கப்பட்டன. தடுப்பூசி போட்டு கொள்வது நோயை பரப்புவதற்காக அல்ல. ஊசி போட்டு கொள்பவருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படும். அதே நேரம், அவர் மூலம் அது சமூகத்தில் வேறு யாருக்கும் பரவாது. சில காலங்களில் இந்நோய் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும்,” என்று கூறினார்.

 அவர் மேலும் பேசுகையில், ‘‘இதில் முரண்பாடு என்னவென்றால், உலக நாடுகள் நம்மிடம் இருந்து தடுப்பூசி வாங்க தயாராக உள்ளன. ஆனால். நம் நாட்டு மக்களில் பலர் அதை போட்டுக் கொள்ள தயங்குகிறோம். பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசிகளே உலகத்தில் கிடையாது. கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயல்திறம் மிக்கவை. எனவே, அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். குறுகிய அரசியல் காரணங்களுக்காக, தடுப்பூசி பற்றி வதந்திகளை பரப்பக் கூடாது,” என்று தெரிவித்தார்.

மோடி இன்று கலந்துரையாடல்

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தடுப்பூசி போட்டு கொண்டவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக வாரணாசியில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.

Related Stories: