3 மாநில போலீசாரின் முயற்சி தோல்வி: டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணியா? விவசாயிகள் ஏற்க மறுப்பு

புதுடெல்லி: ‘குடியரசு தினத்தன்று டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணி நடத்தலாம்,’ என்று 3 மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்த யோசனையை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மத்திய அரசுடன் இதுவரை நடத்தியுள்ள 10 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவியுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க, வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்டமான அளவில் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ‘பேரணிக்கு அனுமதி அளிப்பது பற்றி டெல்லி காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும்,’ எனக் கூறி, தடை விதிக்க உச்ச நீதிமன்ற்ம மறுத்து விட்டது.  இதனால், பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டெல்லி, அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், ‘டெல்லியின் வெளிவட்ட சுற்று சாலையானது மிகவும் பரபரப்பானது. இங்கு சுமார் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடத்துவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, டெல்லி வெளிவட்ட சாலைக்குப் பதிலாக, குண்டலி மனேசர் பல்வால் விரைவு சாலையில் பேரணி நடத்துங்கள்’ என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், இந்த ஆலோசனையை விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை. இது பற்றி ஸ்வராஜ் அபியான் விவசாய சங்கத் தலைவரான யோகேந்திர யாதவ், ‘‘டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணி நடத்துவது சாத்தியமில்லை. டெல்லிக்கு உள்ளேயே அமைதியான முறையில் பேரணி நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

Related Stories: