சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு விழா யாருக்கு? குமரியில் குண்டும் குழியுமான சாலைகள்: “ஊருக்குத்தான் உபதேசம்” பொது மக்கள் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தமிழகத்தில் வருடம் தோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் சாலைகள் போக்குவரைத்துக்கு ஏற்றாற்போல் இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல தோன்றும். தற்போது இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு வார விழா குமரி மாவட்டத்தின் மூலை முடுக்குகளிலும் ஐரூராக நடந்து வருகிறது. இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவின் போது, சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது ஷீட்பெல்ட் அணியவேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாகனத்தை இயக்கும்போது மது குடித்துவிட்டு இயக்ககூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமான ஜங்சன் பகுதியில் போலீசார் வாகனசோதனை நடத்தி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது அரசின் விதிமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் செய்யும் பணி. அதே வேளையில் சாலைகள் சரியாக இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சாலை பாதகாப்பு வாரவிழா நடத்தும் அரசு, மாவட்டத்தில் உள்ள சாலைகளின் நிலையை கண்டு கொள்வது இல்லை. குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டியது உள்ளது.

 இது குறித்து பொது மக்கள் தரப்பில் கூறியதாவது: ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வாரவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வின்போது விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் விலை மதிப்பில்லாத உயிர் போகும் எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி உயிர் பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி கணவன் கண் முன்னே மனைவி இறந்தார். இதுபோல பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஆகியுள்ளது. இதற்கு காரணம் மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாகவே உள்ளது. ஊருக்கு உபதேசம் சொல்லும் அரசு அதிகாரிகள் மோசமான சாலைகளை சீரமைத்தால் பெரும்பாலான விபத்துக்கள் குறையும். வாகனங்களை விழிப்புடன் இயக்க வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம், இந்த சாலைகளை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Related Stories:

>