கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் எப்போது? திருப்பதி, பெங்களூருக்கு செல்ல பயணிகள் திண்டாட்டம்

நெல்லை : கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட பெங்களூரு, ஜம்முதாவி ரயில்களை மீண்டும் இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். 10 மாதங்களை கடந்தும் ரயில்கள் இயக்கப்படாததால் முக்கிய நகரங்களுக்கு செல்ல பயணிகள் திண்டாடுகின்றனர்.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

பின்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக ஜூலை மாதம் முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. செப்டம்பர் மாதம் முதல் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் தொடங்கியது. நெல்லையை பொறுத்தவரை தற்போது நெல்லை வழியாக செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படாமல் உள்ளது.

கொரோனா காலம் தொடங்கி இதுநாள் வரை இயக்கப்படாமல் இருக்கும் சில எக்ஸ்பிரஸ் ரயில்களால் நெல்லை, குமரி மக்கள் குறிப்பிட்ட நகரங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதில் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க நகரங்களாகும். இந்தியாவின் சிலிகான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரத்தில் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு அடுத்து அதிக அளவில் பெங்களூருவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் நெல்லை, நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்ல நேரடி ரயில் வசதி இப்போது இல்லை.

ஏற்கனவே தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வந்த நாகர்கோவில் - பெங்களூரு ரயில் கொரோனாவிற்கு பின்பு இன்று வரை இயக்கப்படாமல் உள்ளது. நெல்லை, குமரி மக்கள் தற்போது பெங்களூரு செல்ல தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரசை பிடிக்க தூத்துக்குடிக்கு செல்ல வேண்டியதுள்ளது. மைசூர் எக்ஸ்பிரசின் முன்பதிவு விரைவில் நிரம்பிவிடும் நிலையில், பெங்களூரு செல்ல பயணிகள் திண்டாடுகின்றனர்.

இதேபோல் செவ்வாய்தோறும் செல்லும் நாகர்கோவில் - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலும் கொரோனாவிற்கு பின்னர் இயக்கப்படவில்லை. ஆந்திரா செல்வோரும், திருப்பதி செல்வோரும் இந்த ரயில் இல்லாமல் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் நெல்லையில் இருந்து திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ஜம்முதாவி எக்ஸ்பிரசும் இதுநாள் வரை இயக்கப்படவில்லை. வடமாநிலங்களுக்கு செல்வோர் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர். சென்னை, திருப்பதி செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் உபயோகமானதாக இருந்தது.

நெல்லை-ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சேவை வெள்ளிக்கிழமை மட்டுமே இனிமேல் தொடரும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனாலும் இன்று வரை அதற்கான சேவை தொடங்கவில்லை. எனவே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 3 ரயில்களையும் மீண்டும் இயக்கினால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பயன்பெறுவர்.

Related Stories: