நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இந்திய அணிக்கு முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் வாழ்த்து.!!!

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து மிகப்பிரமாதமாக ஆடிய இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காபா மைதானத்தில் பதிவு செய்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது. தொடர்ச்சியாக 2வது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றி பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது.

கடந்த 1988 முதலே காபா மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. ஆஸ்திரேலியாவின் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள். இதில் நமது மூன்று தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: