தென்பெண்ணை ஆற்றின் புனித நீர் கொண்டு வந்து அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி-திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை : ஆற்று திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றின் புனித நீர் கொண்டு வந்து, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதன்படி, ரத சப்தமி தினத்தன்று கலசபாக்கம் அருகே செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டபட்டு அடுத்த கவுதம நதியிலும், தை மாதம் 5ம் நாளன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணையாற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது, அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்புக்குரியது.இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்றுத் திருவிழா தீர்த்தவாரிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

எனவே, தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடைபெறுவதாக இருந்த விழா ரத்து செய்யப்பட்டது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறவில்லை.

அதற்கு மாற்று ஏற்பாடாக, தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கோயில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே, சூல வடிவான சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், தீர்த்தவாரி முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது.

Related Stories: