உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டி.டி.வி.தினகரன்: வைகைச்செல்வன் பேச்சு

சென்னை: உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டி.டி.வி.தினகரன் மட்டுமே என அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன் பேசினார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் பகுதியில் நடந்தது. காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இதில்,முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகை செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, வைகைச்செல்வன் பேசுகையில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மைதிலி திருநாவுக்கரசு நிறுத்தப்பட்டார். அதனால்தான் திமுக வேட்பாளர் எழிலரசன் வெற்றிபெற்றார். மாவட்டச் செயலாளராக உள்ள வி.சோமசுந்தரம் போட்டியிட்டு இருந்தால், தற்போதைய எம்எல்ஏ, சட்டமன்ற வளாகத்தை பார்வையிட அனுமதிச் சீட்டு பெற்று செல்லும் நிலை உருவாகி இருக்கும்.வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த், என்னிடம் வாடகை கேட்காதீர்கள், நான் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். டிடிவி தினகரன் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர். இதில் அதிமுகவும் அமுமுகவும் ஒன்றிணையுமா என பொய் பிரசாரம் செய்கிறார்.கமலஹாசன் குறித்து கூறிய கௌதமி, கமல்ஹாசன் மிகப்பெரிய டார்ச்சர், அதனால்தான் அவர் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

* தோல்விக்கு காரணம் ஜெயலலிதாவா?

தமிழகத்தில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக வேட்பாளராக மைதிலி திருநாவுக்கரசை தேர்வு செய்தார். ஆனால், ஜெயலலிதாவை குறை சொல்லும் விதமாக வைகைச்செல்வன் பேசியது, அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அதிமுகவினர் பலர், சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது அதிமுக மேலிடத்திலும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>