டெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்... புரெவி... அடைமழை... தேசிய பேரிடராக அறிவிக்கணும்... ஏக்கருக்கு ரூ32,000 தரணும்..

கோடிக்கணக்கான மக்களின் பசியை தீர்க்கும் காவிரி டெல்டா விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மழை, புயல் என எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்தாலும் உடைந்து போகாமல் மனத்தை இரும்பாக்கி கொண்டு மீண்டும் மக்களுக்கான பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்களின் இன்னல்களை மத்திய, மாநில அரசுகள் செவிசய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிவர், புரெவி, அடைமழை என அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் 13.57 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கிய சேதமடைந்துள்ளது. முதல் போட்ட விவசாயிகளின் கண்ணில் தண்ணீரில் மட்டுமே மிஞ்சியது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது போல், விளைந்த நெல்லை கரைசேர்க்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தஞ்சை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், கரூர் (குளித்தலை) ஆகிய 7 மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதியாகும். இந்தாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி பயிர்கள் சுமார் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பயிர்கள் தற்போது அறுவடைக்காகவும், பால்பிடிக்கும் பருவத்திலும் இருந்து வருகிறது.

இதேபோல் பருத்தி, மக்காசோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவ மழை தவறி பெய்ததாலும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் மற்றும் தொடர் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள், மக்காசோளம், பருத்தி என சுமார் 13.57லட்சம் ஏக்கர் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 3.50 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கீழ்வேளூர், கொள்ளிடம், சீர்காழி, தலைஞாயிறு, வேதாரண்யம், காரியாபட்டினம் செட்டிபுலம் வண்டல், குண்டுரான்வெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2.60 லட்சம் சம்பா தாளடி பயிர்கள் நாசமானது.

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 367 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்ற நிலையில் நிவர், புரெவி மற்றும் தொடர் மழையால் புயலால் 3.77லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் 2 லட்சத்து 37 ஆயிரத்து 977 ஏக்கேர பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டது. இதற்காக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 786 விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ192 கோடியே 38 லட்சத்து 30 ஆயிரம் வர வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 2 லட்சம் ஏக்கரில் சுமார் 85,000 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் கதிர்கள் சாய்ந்தும் அழுகியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, 25,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளம், உளுந்து, பயறு, எள் போன்ற பயிர்களும் மழையின் காரணமாக முழுமையாகவே அழுகிவிட்டன. பெரம்பலூர் மக்காச்சோளம் 83ஏக்கரும், பருத்தி 11 ஆயிரம் ஏக்கர், சம்பா 4400 ஏக்கர், சின்ன வெங்காயம் 4400 என ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெல், தா.பழூர் ஒன்றியத்தில் 10ஆயிரம் ஏக்கர், செந்துறை அருகே வஞ்சியபுரத்தில் 25 ஏக்கர் நெற்பயிர், இருங்களாகுறிச்சி, செந்துறை, குழுமூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர், ஜெயங்கொண்டம் பகுதியில் 1000 ஏக்கர் என மாவட்டத்தில் 51,525 ஏக்கர் சம்பா பயிர் சாய்ந்து முளைத்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர், தோகைமலையில் 1000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து சேதமடைந்தது. திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் திருவெறும்பூர், முசிறி, தா.பேட்டை பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் சம்பா, 20 ஆயிரம் ஏக்கர் பருத்தி, மக்காச்சோளம், புள்ளாம்பாடி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பருத்தி, 30000 ஏக்கர் மக்காச்சோளம், துறையூர் பகுதியில் 1000 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம், மண்ணச்சநல்லூர் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், 2,500 ஏக்கர் வெங்காயம், 4 ஆயிரம் ஏக்கர் சோளம், கம்பு, துவரை பயிர்களும், 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் கடலை பயிர்கள்,

மேலும் 72 கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த 1067 ஏக்கர் காய்கறிகள், 13 ஏக்கரில் பூக்கள் என மாவட்டம் 91,080 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் மற்றும் புரெவி புயல் சேதங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியகுழு பார்வையிட்டு சென்றது. மேலும் வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் உள்ளிட்ட துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத விபரங்களை கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக் ஒன்றிற்கு ரூ20 ஆயிரம் அறிவித்தார். இது ஏக்கர் ஒன்றுக்கு ₹8 ஆயிரம் மட்டுமே ஆகும்.

ஆனால் விவசாயி அமைப்புகள், சாகுபடிக்காக செலவிடப்பட்ட செலவினங்களுக்கான தொகை இல்லாததால், ஒரு ஏக்கருக்கு ரூ32.500 நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உடனடியாக வந்து பார்வையிட்டிருக்க வேண்டும், பாரத பிரதமர் மோடியை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வைத்து, இந்த பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வரும், பிரதமரும், தேர்தல் கணக்கீட்டு, பரப்புரையில் மட்டும் உள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க பிரதரிடம் முதல்வர் வலியுறுத்த் வேண்டும்.

ஏக்கருக்கு ரூ32 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இல்லை என்றால் இதன் எதிரொலி வரும் சட்டமன்ற தேர்தலில் வெளிப்படும். என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை விவசாயிகள்: மழையினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பலவிதமான பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை கூட்டாக சென்று கணக்கெடுத்து, விவசாயிகளின் ஆதார் எண், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களுடன் ஜனவரி 29ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்து.

காவேரி வைகை குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் மிசா மாரிமுத்து: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடி கணக்கின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஒரு போக சாகுபடியான சம்பா முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். இதுதவிர, காப்பீடு செய்தோருக்கு இழப்பீடு தனியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி: ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரம் வரை செலவு ஏற்படும் நிலையில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ20 ஆயிரம் என்று அரசு அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.

எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள், ஒரு போகம் சாகுபடியான சம்பாவிற்கு போதுமான தண்ணீர் உள்ளது என்ற நம்பிக்கையில் கடந்தாண்டை விட அதிக அளவில் சாகுபடி செய்தனர். ஆனால் புரவி, நிவர் மற்றும் தொடர் மழையால் கஜா புயலின் போது ஏற்பட்ட பாதிப்பை விட அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் ஏக்கருக்கு ரூ32,500 செலவிட்டு சாகுபடி செய்த நிலையில், செலவிட்டு தொகையான ரூ. 32,500 அறிவிக்காதது விவசாயிகளை ஏமாற்றுவதாகும். கூட்டுறவு வங்கி மற்றும் அரசு வங்கிகளில் ஏக்கர் ஒன்றிற்கு ரூ32,500 என கடன் வழங்கப்படுகிறது. ஆனால் முதல்வர், விவசாயிகளுக்கு வழங்கும் கடனை பற்றி கூட தெரியாமல், இடுபொருள் மானியம் என அறிவித்துள்ளது நியாயமற்ற செயலாகும். இழப்பீட்டு தொகை வழங்குவதில் வெளிப்படை தன்மை இல்லை. எனவே ஏக்கருக்கு செலவிட்டு தொகையான, குறைந்த பட்ச தொகை ₹32,500 வழங்க வேண்டும். விவசாயி என கூறும் முதல்வர் விவசாயிகளை கைவிட்டுவிட்டு தேர்தல் பரப்புரையில் ஆர்வமாக இருக்கிறாரே தவிர, உண்மையான விவசாயிகளின் துயரை துடைக்க தயாராக இல்லை.

விவசாயிகள் வேதனை வரும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறப்பதற்காக, பிரதமரை அழைக்க சென்ற முதல்வர், தேசிய பேரிடராக அறிவிக்க, பிரதமரை ஏன் கேட்கவில்லை. எனவே, நிபந்தனையின்றி கடன் தள்ளுபடி செய்யவேண்டும், தேசிய பேரிடராக அறிவிக்க, பிரதமரை அழைத்து வரவேண்டும். உற்பத்திக்கான செலவிட்டு தொகையான ரூ32.500 வழங்க வேண்டும். தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் அமைப்பு செயலாளர் தர்: நாகை மாவட்டத்தில் 1.45 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100 சதவீதம் காப்பீடு தொகை வழங்க வேண்டும். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொருளாளர் புருஷோத்ததாஸ்: ஒரு ஏக்கருக்கு ரூ25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து அறுவடை செய்து பணத்தை கையில் பார்க்கும் நேரத்தில் நெல் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் செலவு செய்த விவசாயிகளுக்கு தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ரூ4 ஆயிரம் என்ற அளவில் நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் தான் அடுத்த ஆண்டு கடன் வாங்கி சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும் நெல் சாகுபடிக்கு பின் ஜனவரி 2வது வாரத்தில் கோடை பணப்பயிரான உளுந்து, பச்சை பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். தற்போது ஜனவரி 15ம் தேதி வரை பெய்த கன மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உளுந்து, பச்சை பயறு விதைப்பதும் கேள்வி குறியாக உள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் பெருமழை பெய்துள்ளது. கதிர் வந்த நிலையில் நெற்பயிர் முழுவதுமாக அழிந்துவிட்டது. விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஹெக்டேருக்கு 20000 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இது விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. 5ஆயிரம், 2000 பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. முழு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு 35000 வழங்கப்படும் நிலையில், அறுவடை ஆய்வறிக்கை என்ற பெயரில் கணக்கெடுப்பை கைவிட்டு முழுமையாக ஏக்கருக்கு ரூ.35ஆயிரத்தை மார்ச் மாதத்துக்கு பெற்றுகொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் பிரதமரை சந்திக்க உள்ளார். டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கும் உத்தரவை முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றார்.

திருச்சியில் எம்ஜிஆர் சிலை முன் நாளை நியாயம் கேட்கும் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு பொது செயலாளர் அய்யாக்கண்ணு: திருச்சி மாவட்டத்தில் 70 சதவீதம் என டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நாசமாகிவிட்டது. ஏக்கருக்கு குறைந்தது ₹30ஆயிரம் செலவு செய்துள்ளோம். ஆனால் அரசு அறிவித்தது ஹெக்டேருக்கு ₹20ஆயிரம். அதுவும் விவசாயிகள் வங்கி கணக்கில் முழுமையாக வந்து சேரவில்லை. முதல்வர் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை.

எனவே டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இதை கண்டித்து நாளை திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன் விவசாயிகள் அமர்ந்து நியாயம் கேட்கும் போராட்டம் நடத்தப்படும். அப்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு தொகையை முழுமையாக மார்ச் மாதத்துக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

Related Stories: