ஆண்டிபட்டி அருகே சாலை வசதியில்லாத சத்யா நகர்: ஊராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள சத்யா நகரில் சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்; தங்களை ஊராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே, டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி 1வது வார்டில் சத்யா நகர் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வைகை அணைச் சாலையில் உள்ள இப்பகுதியில் வாறுகால், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வைகை அணைச் சாலையில் ஓடுகிறது. மழை காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குகிறது. போதிய தெருவிளக்குகள் இல்லாதாதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். குப்பைகளை அள்ளாததால் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து சத்யா நகர் கிஷோர் கூறுகையில், ‘டி.ராஜகோபாலன்பட்டியில் அதிமுகவைச் சேர்ந்தவர் ஊராட்சி தலைவராக உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுகேட்டு வரும்போது, இப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். ஆனால், தற்போது எங்களை கண்டுகொள்வதில்லை. அடிப்படை வசதிகோரி சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அப்போது எங்களை சமாதானம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றனர். பின்னர் கிடப்பில் போடுகின்றனர். எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.  

கோட்டையம்மாள் என்பவர் கூறுகையில், ‘சத்யா நகருக்கு சாலை வசதி இல்லாததால், அவசர காலங்களில் ஆட்டோ கூட வருவதில்லை. வாறுகால் வசதியில்லை. குப்பைகளை அள்ளாததால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: