இறக்குமதி இல்லாததால் எகிறியது விலை 9 மாதங்களில் இரும்பு கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம்

சேலம்: தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் இரும்புக்கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் சென்னை, சேலம், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கட்டுமானத்திற்கு தேவையான இரும்புக்கம்பிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் உற்பத்தியாகும் இரும்புக்கம்பிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு டன் இரும்பு கம்பி ₹45 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வால் கட்டுமான பணிகள் சுறுசுறுப்படைய தொடங்கியது. இதன் காரணமாக இரும்புக்கம்பியின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு டன் கம்பிக்கு 2 ஆயிரம் அதிகரித்து 47 ஆயிரத்திற்கு விற்றது.

 இந்நிலையில், தற்போது ஒரு டன் இரும்பு கம்பி 60 ஆயிரம் முதல் 63 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கடந்த 9 மாதங்களில் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை 20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கட்டிட உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.  விலை உயர்வால், அரசின் கட்டுமானங்களும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், ‘‘இரும்பின் மூலப்பொருட்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி இல்லாததால், விலை உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு டன் இரும்பு கம்பி 45 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது ஒரு டன்னுக்கு 20 ஆயிரம் வரை அதிகரித்து 65 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. இரும்பு மூலபொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, இரும்பு கம்பியின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: