போதைப்பொருள் வழக்கில் கைதான அமைச்சர் நவாப் மாலிக் மருமகன் வீட்டில் ரெய்டு: 18ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான்  வீட்டில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ரெய்டு நடத்தினர். மருமகன் கைது குறித்து குறிப்பிடும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நவாப்மாலிக், சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யும். இறுதியில் நீதி வெல்லும்‘ என கருத்து தெரிவித்துள்ளார். இவரது மருமகன் சமீர் கானிடம் வரும் 18ம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 போதை பொருள் தொடர்பான வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த சன்ஜானி என்பவர் உட்பட 3 பேரை போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். கார் பகுதியிலும் பாந்த்ராவிலும் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 200 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் சில அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டவை என அதிகாரிகள் கூறினர்.  இந்த நிலையில் இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த ராம்குமார் திவாரி என்பவர் 2 நாள் முன்பு கைது செய்யப்பட்டார். இவர் கெம்ப் கார்னரில் இருக்கும் பிரசித்தி பெற்ற முச்சாட் பான்வால் என்ற பான் கடையின் உரிமையாளர் ஆவார்.

 இந்த கடைக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பெரும் புள்ளிகள் வந்து வெற்றிலை வாங்கிச் செல்வது வழக்கம் ஆகும்.இதன் இடையே, கடந்த வாரம்  கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானுக்கும் இடையே ஆன்லைனில் ரூ.20,000 பண பரிவர்த்தனை நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து சமீர் கானை விசாரணைக்கு வருமாறு போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை தொடர்ந்து சமீர் கான் பலாட்பியரில் உள்ள போதை பொருள் தடுப்பு துறை அலுவலகத்துக்கு சென்றார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் வரும் 18ம் தேதி வரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த கைது நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் நவாப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை. சட்டம் தனது கடமையை செய்யும். இறுதியில் நீதியே வெல்லும் என தெரிவித்துள்ளார். ஆனால், கைது நடவடிக்கை பற்றி குறிப்பிடாமல் பொதுவான கருத்தாக இதனை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், அமைச்சரின் மருமகன் சமீர் கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் நேற்று ரெய்டு நடத்தினர்.  பாந்த்ரா புறநகர் பகுதியில் உள்ள சமீர்கான் வீட்டில் இந்த ரெய்டு நடந்தது. ஆனால், ஆவணம் உட்பட எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதுபோல் ஜூகு பகுதியிலும் இந்த வழக்கு தொடர்பாக ரெய்டுகள் நடத்தப்பட்டன.

Related Stories: