தமிழக நலன்களை அதானிக்கு சாதகமாக சுற்றுச்சூழல் துறை அனுமதி தரக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக  விரிவாக்கத்திற்குப் பொதுமக்களின் கருத்தினைக் கேட்கும் “பொது விசாரணை” ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனையும் - சுற்றுப்புறச் சூழலியல் பாதுகாப்பையும் அ.தி.மு.க. அரசும் - மத்திய பா.ஜ.க. அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரைவார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சென்னை அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்குத் தேவைப்படும் 6110 ஏக்கர் நிலங்களில் 2291 ஏக்கரைப் பொதுமக்களிடமிருந்தும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமாக உள்ள தனியார் நிலம் 1515 ஏக்கரையும் அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுக்க - அடாவடியாகப் பெற்றுக் கொடுக்க அதிகார துஷ்பிரயோகம் நடைபெறவிருக்கிறது.

இந்த துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் மூழ்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் 35 லட்சம் மக்களுக்கு ஏற்படும் நிலை உருவாகிறது. ஆகவே 82 கிராமங்களில் வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வாழும் 35 லட்சம் மக்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, “மக்கள் கருத்துக் கேட்பிற்கான” கூட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தத் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் துறை அனுமதியோ அல்லது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எவ்வித நடவடிக்கைகளையுமோ முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் - பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசும் எடுக்கக் கூடாது.

Related Stories: