மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சின்னர அங்களா திட்டத்தில் சிறப்பு வகுப்புகள்: கல்வி இயக்குனரகம் ஏற்பாடு

பெங்களூரு: மாநிலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சுமார் 17 ஆயிரம் சிறுவர், சிறுமியர்களுக்கு சின்னர அங்களா திட்டத்தின் கீழ், வரும் ஏப்ரல் இரண்டாவது வாரம் தொடங்கி ஜூன் இரண்டாவது வாரம் வரை சிறப்பு வகுப்பு நடத்த கல்வி இயக்குனரம் ஏற்பாடு செய்துள்ளது. கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி சட்டம் அறிமுகம் செய்தது. அத்திட்டத்தின் படி வறுமை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுவர், சிறுமியர்களுக்கு கோடைகாலத்தில் சிறப்பு வகுப்பு நடத்தி அவர்கள் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசு உத்தரவை ஏற்று ‘‘சின்னர அங்களா’’ என்ற பெயரில் மாநில அரசு கோடைகால சிறப்பு முகாம் நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டு தொடங்கி 7 மாதங்கள் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதை  கண்டறிய வாய்ப்பு குறைவு. இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் கிராமபுறங்களில் வீடு வீடாக சென்று அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தி மாநில அரசிடம் முதல் கட்ட அறிக்கை கொடுத்துள்ளனர்.  அதை அடிப்படையாக வைத்து வழக்கமாக நடக்கும் வகுப்புகளுடன் சின்னர அங்களா வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  பயிற்சி முகாமில் சேரும் சிறுவர்களுக்கு உணவு, பயண செலவு, உடை உள்பட பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் ஆசிரியர்களுடன் தலா 3 மேற்பார்வை அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். 3 மாதம் பயிற்சி முடித்தபின், அவர்கள் வயதுக்கு ஏற்ற வகையில் வரும் 2021-22ம் கல்வியாண்டில் வகுப்பில் சேர்க்கப்படுவர்  என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Related Stories: