சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை: வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

காங்கயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சியை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது.சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா? என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படும்.

இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூ மாலை, இருப்பு சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் நிறைநாழி படி அரிசி வைத்து பூஜையானது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூர் அருகே உள்ள உண்டாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவராம் (55) என்பவரின் கனவில் நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்ய உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் மக்காச்சோளம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது குறித்து கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், `சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த முறை அரிசி வைத்து பூஜையானது வேளாண் சட்டத்தில் மாற்றம் வந்தது. தற்போது விவசாய பொருள் வைக்கப்பட்டுள்ளதால், விளைச்சலில் மாற்றம் ஏற்படும் அல்லது வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா? என போக போக தான் தெரியவரும்’ என்றார்.

Related Stories: