மதுரை மேலமடையில் பாஜ அலுவலகம் மீது தாக்குதல்: 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

மதுரை: மதுரை மேலமடையில் உள்ள பாஜ அலுவலகத்தை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாஜவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திருப்பாலையில் மதுரை புறநகர் பாஜ சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது. புறநகர் மாவட்டத்தலைவர் சுசிந்திரன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜ மாநிலத்தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அங்கு ஒரு பிரிவினருக்கும், பாஜவினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், மதுரை மேலமடையில் உள்ள புறநகர் மாவட்டத்தலைவர் சுசீந்திரனின் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் வந்தது.

 இந்த கும்பலால் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 30 பிளாஸ்டிக் நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதோடு, அலுவலக பேனரும் கிழிக்கப்பட்டது. இது குறித்து அண்ணாநகர் போலீசில் சுசீந்திரன் புகார் செய்தார். அதில், ‘அலுவலக அறைக்குள் இருந்த என்னை ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விட்டுச் சென்றது’ என ெதரிவித்துள்ளார். போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாஜ சார்பில் அலுவலகம் முன்பு 2 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் நடந்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.அலுவலகத்திற்குள் நுழைந்த கும்பல் இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கிளம்பிச்செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: