திமுக பிரசாரம் காரணமாக மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியால் அதிமுக மிரண்டுபோய் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக சட்டத்துறையின் 2வது மாநாடு, சட்டம் மற்றும் அரசியல் கருத்தரங்கம் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. சட்ட கருத்தரங்கத்திற்கு திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் வரவேற்றார். திமுக கொடியை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். சட்ட கருத்தரங்கை துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்பி தொடங்கி வைத்தார்.

திமுக சட்டத்துறையின் பணிகளும், செயல்பாடுகளும் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.பாரதி எம்பி, தீங்கு விளைவிக்கும் சட்டங்களின் தாக்கம் என்ற தலைப்பில் திருச்சி என்.சிவா எம்பி. மக்களாட்சியும், ஜனநாயக அமைப்புகளும் என்ற தலைப்பில் முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், மக்கள் நலனை காப்பாற்றுவதில் திமுகவின் பங்கு என்ற தலைப்பில் திக பிரசார செயலாளர் அருள்மொழி, தனிநபர்களின் உரிமைகளை பறிக்கும் பெரும் முதலாளிகளின் வருகை என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நம்மளை விட்டு பிரிந்து சென்று விட்டார். மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா பக்கத்தில் தனது கடைசி உறக்கம் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். இதற்கான வழக்கு விடிய, விடிய நடந்தது. அதிலும் அவர் வெற்றி பெற்றார். அவர் இறந்தும் வெற்றி பெற காரணமாக இருந்தது சட்டத்துறை வழக்கறிஞர் அணி தான். திமுகவின் பிரசாரத்தால் மக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிமுக அரசு மிரண்டு போய் உள்ளது. என் மீது அவதூறு வழக்கும் பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கையும் வழக்கறிஞர்கள் நீங்கள் தான் அதை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மாநாட்டில் பார் கவுன்சில் உறுப்பினர் இரா.விடுதலை, மாநிலங்களவை எம்பிக்கள் என்.ஆர்.இளங்கோ பி.வில்சன், மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன், மாவட்ட செயலாளர்கள் மயிலை த.வேலு, சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பெ.ரகு, ஆயிரம் விளக்கு பகுதி வழக்கறிஞர் அணி ஜெ.பி.ரவிவர்மன் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Related Stories: