வானில் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது வெடித்து சிதறிய இந்தோனேஷிய விமானம்: ஜாவா கடலில் கருப்பு பெட்டி; பயணம் செய்த 62 பேரும் பலி

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உடைந்த பாகங்கள், கருப்பு பெட்டி ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகலில், ஸ்ரீவிஜயா நிறுவனத்தின் எஸ்ஜே-182 விமானம் புறப்பட்டது. இதில் 3 குழந்தைகள், 7 சிறுவர்கள் உட்பட 56 பயணிகள் பயணம் செய்தனர். விமானி உட்பட 6 ஊழியர்களும் அதில் இருந்தனர். விமானம் புறப்பட்ட பிறகு ஒன்றரை மணி நேரம் பறந்த நிலையில், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் முதல் கட்ட தகவலில் கூறப்பட்டது.

ஆனால், விமானம் புறப்பட்ட 4வது நிமிடத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது, ஜாவா கடல் மீது 10,900 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. இதனால், மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனால், ஜாவா கடலில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட கடற்படை கப்பல், விமானத்தின் சோனார் கருவிகளில் இருந்து சிக்னலை வைத்து கண்டறிந்தது. இதன் மூலம், கடலின் 75 அடி ஆழத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல் பாகங்கள், துணிகள் ஆகியவை நேற்று கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் நொறுங்கி விழுந்ததாக அந்நாட்டின் ஏர்மார்ஷல் ஹாதி ஜாஜந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. விபத்தை உறுதிபடுத்திய இந்தோனேஷிய அதிபர் ஜாகோ விடோடோ, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விமானம் மாயமான சமயத்தில், லாங்சங் மற்றும் லகி தீவுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்த மீனவர்கள், பெரும் வெடி சத்தத்தை கேட்டதாக கூறி உள்ளனர். சத்தத்தை தொடர்ந்து தீப்பிழப்பு ஏற்பட்டதாகவும், மோசமான வானிலை நிலவியதால் அதை தெளிவாக பார்க்க முடியவில்லை எனவும் கூறி உள்ளனர்.

இதனால், விமானம் வெடித்து சிதறி கடலில் நொறுங்கி விழுந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மீட்பு பணியில் விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த பின் விபத்துக்கான முழு காரணம் தெரியவரும். மோடி இரங்கல்: இந்தோனேஷிய விமான விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தோனேஷியாவில் எதிர்பாராத இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சமயத்தில் இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்’’ என்றார்.

* இந்தோனேஷியாவில் கடந்த 1945ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள 104 விமான விபத்துகளில் 1,300 பேர் பலியாகி உள்ளனர்.

* தொடர்ச்சியான விமான விபத்துகள் காரணமாக இந்தோனேஷிய விமான நிறுவன விமானங்களுக்கு கடந்த 2007 முதல் 2018 ம் ஆண்டு வரை ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருந்தது.

* 2018ம் ஆண்டு அக்டோபரில் லயன் ஏர்லைன்சின் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட அடுத்த நிமிடமே ஜாவா கடலில் விழுந்து 189 பேர் பலியாகினர்.   

Related Stories: