மகாராஷ்டிராவில் அதிகாலையில் பயங்கரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப சாவு: தலைவர்கள் இரங்கல்

பாந்தரா: மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், பாந்தரா மாவட்டத்தில் மாவட்ட பொது மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல் 3 மாதம் வரையிலான குழந்தைகள் வரை 17 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று அதிகாலை இந்த பிரிவில் இருந்து திடீரென புகை வெளிவந்தது. இதை பார்த்து அங்கிருந்த செவிலியர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருத்துவர்கள், ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். அதற்குள் மளமளவென பரவிய தீ, குழந்தைகள் நலப்பிரிவையும் சூழ்ந்தது. அதில் இருந்த 17 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அதற்குள் 3 குழந்தைகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அவர்கள் சிகிச்சைக்கு முன்பாகவே பரிதாபமாக இறந்தன. மேலும், 7 குழந்தைகள் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தன. மற்ற 7 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தும்படி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மேலும், பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், ராகுல் இரங்கல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தீ விபத்தில் குழந்தைகள் அகால மரணமடைந்தது அறிந்து வேதனை அடைகிறேன். இதயத்தை நொறுக்கிடும் இந்த சம்பவத்தில், குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இதயத்தை நொறுக்கும் துயரமான சம்பவம். விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்து விட்டோம். காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்,’ என கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்த தீ விபத்து துரதிருஷ்டவசமானது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல் தெரிவிக்கிறேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories: