பணியில் இருந்த எஸ்ஐ மீது தாக்குதல் இன்ஸ்பெக்டர் மகன் அதிரடி கைது

புழல்: புழல் அருகே போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிய இன்ஸ்பெக்டர் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். புழல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜான் பீட்டர் (58), நேற்று முன்தினம் மாலை, காவலர் பாபுவுடன் புழல் அம்பேத்கர் சிலை அருகே உள்ள சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் ஓட்டி வந்த காரும், செங்குன்றத்தை சேர்ந்த சிரஞ்சீவி ஓட்டி வந்த சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டரின் மகன், சரக்கு ஆட்டோ டிரைவரை கடுமையாக திட்டி, சரக்கு ஆட்டோ சாவியை பிடுங்கி வைத்து கொண்டார்.

அப்போது, பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ  ஜான் பீட்டரிடம் சென்ற சிரஞ்சீவி, நடந்த சம்பவம் குறித்து கூறி தனது சரக்கு ஆட்டோவின் சாவியை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். இதுகுறித்து, சிறப்பு எஸ்ஐ ஜான்பீட்டர், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டரின் மற்றொரு மகன், சரக்கு ஆட்டோ டிரைவர் சிரஞ்சீவியை தகாத வார்த்தைகளால் திட்டி, சராமரியாக தாக்கினார். இதை பார்த்த சிறப்பு எஸ்ஐ ஜான்பீட்டர், ‘நான் இருக்கும்போதே, ஏன் அடிக்கிறாய்’ என அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டரின் மற்றொரு மகன் சிறப்பு எஸ்ஐயையும்  சரமாரியாக தாக்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், இன்ஸ்பெக்டர் மகனை மடக்கிப் பிடித்து, புழல் போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவரின் தந்தை கண்ணப்பன் சென்னையில் உள்ள சிறப்பு காவல் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதும், தந்தை போலீஸ் என்பதால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மகன், சிறப்பு எஸ்ஐயை தாக்கியதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்தனர். பின்னர் அவரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: