குன்னூர்- ரன்னிமேடு இடையே கூடுதல் மலை ரயில் இயக்கம்: சேலம் கோட்ட பொது மேலாளர் தகவல்

குன்னூர்: சுற்றுலா பயணிகளிடம் உள்ள வரவேற்பை பொறுத்து குன்னூர்- ரன்னிமேடு இடையே கூடுதல் மலை ரயில் இயக்கப்படும் என சேலம் கோட்ட பொதுமேலாளர் கூறினார். கொரோனா ஊரடங்கால் கடந்த 9 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் கடந்த டிச., 31ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சேலம் கோட்ட பொது மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் நேற்று சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்து, ஆய்வு மேற்கொண்டார். இதில் ஹில்குரோவ், ரன்னிமேடு, குன்னூர் பணிமனை ஆகியவற்றை ஆய்வு செய்தார். முன்னதாக குன்னூர் ரயில்வே நிலையத்தில் அவருக்கு ஊழியர்கள் சார்பில் ‘மலை ரயிலின் சிறப்பு லோகோ கோட் அணிவித்து வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுமேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தற்போது மீண்டும் மலை ரயில்  இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகளிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. இனி வருங்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பொறுத்து குன்னூர்- ரன்னிமேடு இடையே கூடுதல் மலை ரயில்  மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்படும்,’’ என்றார்.

Related Stories: