இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து; கன்னியாகுமரி கடற்கரையில் 70 கடைகள் எரிந்து சாம்பல்: பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள கடைகளில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 70 கடைகள் எரிந்து நாசமானது. கடைகளில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் தீயில் கருகின. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் ேதாறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக 9 மாதங்களுக்கு பின் தற்போது தான் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் ஆகும. லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கன்னியாகுமரியில் சீசன் இல்லாமல் போனது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்தும் சமீபத்தில் தான் தொடங்கியது. மெல்ல, மெல்ல இயல்பு நிலை வருவதை தொடர்ந்து, கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகளும் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில், கன்னியாகுமரி கடற்கரை வளாகத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. காற்றும் வேகமாக வீசியதால், மளமளவென அருகில் உள்ள கடைளுக்கும் தீ பரவியது.

இந்த பகுதியில் விளையாட்டு சாதன பொருட்கள் விற்பனை கடைகள், துணி கடைகள், ஓட்டல்கள், பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், டாட் வரைதல் கடைகள் என சுமார் 70 கடைகள் உள்ளன. கொளுந்து விட்டு எரிந்த தீயில் இந்த கடைகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. நேரம் செல்ல, செல்ல தீயின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தீ விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 5 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் காற்று வீசியதால், அவ்வப்போது தீ மீண்டும், மீண்டும் எரிந்த வண்ணம் இருந்தன.

இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. இதன் சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என வியாபாரிகள் கூறினர். தீ விபத்து குறித்து அறிந்ததும் வியாபாரிகள் வந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. கடைகளுக்கு வெளியே உறங்கி கொண்டிருந்தவர்கள் கண் விழித்ததால், அவர்களும் உயிர் தப்பினர்.

தீ விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்யதாஸ், வருவாய் ஆய்வாளர் இப்ராஹீம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளும் வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி கடற்கரை வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஸ் சிலிண்டர்கள் வெடித்தன

தீ விபத்து நடந்த கடைகளில் ஓட்டல்கள் உள்ளன. இதில் ஒரு சில ஓட்டல்களில் இருந்த காஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் தீ விபத்து நடந்த பகுதியில் நின்றவர்கள் அலறி அடித்து ஓடினர். அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் என்பதால், தீ மளமளவென எரிந்தது. கடைகள் அனைத்தும் நெருக்கமாக அடுத்தடுத்து அமைக்கப்பட்டு இருந்ததால், ஒரு கடையில் பிடித்த தீ மள, மளவென பரவியது. கடைகளின் மேற்கூரைகள் அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் மூலம் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தீ விபத்தில் எதுவுமே தப்பவில்லை. கடற்கரை பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

Related Stories: