பொன்னமராவதி அருகே இலவச ஆடு வழங்க ரூ2000 லஞ்சம் பெற்றதாக வீடியோ வைரல் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்: பணிதள பொறுப்பாளர் நீக்கம்: கலெக்டர் அதிரடி

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் ரூ2ஆயிரம் பெற்றதாக சமூகவலைதளங்களில் உலா வந்ததை அடுத்து ஊராட்சி செயலரை பணியிடம் நீக்கம் செய்தும், பணிதள பொறுப்பாளரை நீக்கம் செய்து கலெக்டர் உமாமகேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள், எம்.உசிலம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் 144 பேருக்கு வழங்க  பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 4ம்தேதி பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலின் முன்பாக டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

டோக்கனுக்கு 2000 ரூபாய் ஊராட்சி செயலர் சேவகோன் மற்றும் 100நாள் பணித்தளப் பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர்  வசூலித்துள்ளனர். பணம் வாங்குவதுபற்றி பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது,  அரசு வழங்கும் பணத்தில் நல்ல ஆடுகள் வாங்க முடியாது. பணம் கொடுத்தால் தான் தரமான ஆடுகளை வாங்கி தர முடியும் என கூறியுள்ளனர். இந்நிலையில் அரசின் இலவச ஆடுகள் வழங்க ரூ2ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில்  போட்டோவுடன் வீடியோ வைரலாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விலையில்லா ஆடுகள் வழங்க ரூ2 ஆயிரம் பணம் பெற்றதாக கூறப்பட்ட எம்.உசிலம்பட்டி ஊராட்சி செயலர் சேவகோனை தற்காலிக பணி நீக்கம் செய்தும்,

பணித்தளப் பொறுப்பளார் முருகேசனை பணிநீக்கம் செய்தும், இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தவும் கலெக்டர் உமாமகேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும், இப்பணியை முறையாக கண்காணிக்கத் தவறிய வட்டார கால்நடை மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Related Stories: