நாகை அருகே ரேசனில் வழங்கப்பட்ட இலவச அரிசியில் புழுக்கள் சாலையில் போட்டு போராட்டம்: கடைகளுக்கு பூட்டு போடுவோம் என பெண்கள் எச்சரிக்கை

நாகை: நாகை அருகே மீனவ கிராமத்தில் ரேசன் கடையில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசியில் புழுக்கள் இருப்பதால் ரேசன் அரிசி மூட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்திய மக்கள் இனியும் தொடர்ந்தால் ரேசன் கடைகளுக்கு பூட்டு போடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாகை அருகே டாடாநகர், சேவாபாரதி மீனவ கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அங்குள்ள ரேசன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் விலையில்லா ரேசன் அரிசியில் புழுக்கள் அதிகமாக இருந்தது.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் ரேசன்கடை ஊழியரிடம் முறையிட்டனர். அதற்கு ரேசன் கடை ஊழியர் அடுத்த மாதம் வழங்கப்படும் விலையில்லா அரிசியில் புழுக்கள் இருக்காது என்று கூறியுள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் ரேசன் அரிசியை வாங்குவதை தவிர்த்தனர். சிலர் வாங்கிய அரிசியை வேறு வழியின்றி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து விட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று வாங்கிய விலையில்லா ரேசன் அரிசியில் புழுக்கள் அதிகம் இருந்தது. இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ரேசன்கடை ஊழியரிடம் புகார் கூறினர். அதற்கு ரேசன் கடை ஊழியர் அரசு கொடுக்கும் அரிசியை விநியோகம் செய்கிறேன்.

என்னால் என்ன செய்ய முடியும் என்று கூறினார். இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஒன்று கூடி விலையில்லா ரேசன் அரிசி மூட்டைகளை தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்து சாலையில் தூக்கி வீசி போராட்டம் நடத்தினர். இனி வரும் காலங்களில் இதேபோல் பயன்படுத்த முடியாத பொருட்களை விநியோகம் செய்தால் ரேசன் கடைக்கு பூட்டு போட்டு விடுவோம் என்று கூறினர்.

Related Stories: