நீடாமங்கலம் அருகே புதிய நெல் ரக செயல் விளக்க திடல் அமைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் உள்ள சலிப்பேரி கிராமத்தில் புதிய நெல் ரகம் ஏ.டீ.டி. 54 ரகத்தின் செயல் விளக்க திடல் அமைக்கப்பட்டுள்ளது.வேளாண் அறிவியல் நிலையம் நீடாமங்கலம் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் அறிவுறுத்தலின் பேரில் நன்னிலம் வட்டாரத்தில் சலிப்பேரி கிராமத்தில் ஏ.டீ.டி. 54 என்ற புதிய மத்திய கால நெல் ரகத்தின் செயல் விளக்க திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பயிர் மேலாண்மை மற்றும் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய வெளி வளாக பயிற்சி நடைபெற்றது.இந்த செயல்விளக்கத் திட்டத்தை பரவலாக்கம் செய்திருக்கும் சுற்றுச்சூழலியல் உதவி பேராசிரியர் செல்வமுருகன் கூறுகையில், புதிய நெல் ரகத்தை திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இந்த ரகத்தை பின் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகவும், 130-135 நாட்கள் வயதுடைய மத்திய கால ரகம் எனவும் சாயாத தன்மை உடையது எனவும் சராசரி மகசூல் எடை ஒரு ஏக்கருக்கு 6,300 கிலோ கிடைக்கும் எனவும் தெரிவித்தார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இலை மடக்குப் புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்டது எனவும், குலைநோய் மற்றும் தண்டுதுளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது என்றும் கூறினார். மேலும் பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முன்னோடி விவசாயி சோமசுந்தரம் செய்திருந்தார்.

Related Stories: