சின்னமனூர் யூனியன் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக அரசு நிதி வழங்குவதில்லை : திமுக ஒன்றியத்தலைவர் குற்றச்சாட்டு

சின்னமனூர்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியனின் சாதாரண கூட்டம்நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாத்துரை தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெயந்தி சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் வரை வாசிக்கப்பட்டன. 11வது தீர்மானத்தில் 56.05 லட்சத்திற்கு சின்னஓவலாபுரம், எரசக்கநாயக்கனூர், காமாட்சிபுரம், கன்னிசேர்வைபட்டி, பொட்டிபுரம், சங்கராபுரம், எரணம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள 15வது நிதி குழுவிலிருந்து நிதி ஒதுக்கி தரவேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தபோது, 4 அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். இதனால், தலைவர், துணைத்தலைவர் உள்பட 6 திமுக ஒன்றியக் கவுன்சிலர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்தினர். இதில், வெளி நடப்பு குறித்து விவாதம் நடந்தது.

வெளிநடப்பு செய்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் கூறுகையில், ‘ஒன்றிய குழு தலைவர் பகுதிக்கு மட்டும் வளர்ச்சிப்பணி நிதி ஒதுக்கி கொண்டனர். எங்கள் பகுதிக்கு ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினர். இது குறித்து பிடிஓ நாகராஜிடம் கேட்டபோது, ‘7 கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாகுபாடு இல்லை. அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ய தேவையில்லை’ என்றார். ஒன்றியத்தலைவர் நிவேதா அண்ணாத்துரை கூறுகையில், ‘ரூ.56 லட்சத்திற்கு பணிகள் செய்ய நிதி கேட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை தவறாக புரிந்து கொண்டு, தேவையில்லாமல் வெளிநடப்பு செய்துள்ளனர். வருகிற நிதியை கட்சிப் பாகுபாடு இல்லாமல் சமமாக பிரித்து பணி கொடுப்பேன். நாங்கள் பொறுப்பேற்றதில் இருந்து 3 முறை கூட்டம் நடத்தியுள்ளோம். ஆனால், அதிமுக அரசிடம் இருந்து நிதியில்லை என்ற பதில்தான் வருகிறது. அதிமுக கவுன்சிலர்கள் புரிதல் இல்லாமல் வெளிநடப்பு செய்துவிட்டனர். வருவார்கள் என காத்திருந்தோம். மெஜாரிட்டி இருந்ததால் 13 தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் நிறைவு செய்தோம்’ என்றார்.

Related Stories: