பயோமெட்ரிக் முறையால் சிக்னல், சர்வர் பிரச்னை ரேஷன் கடையில் பொருள் சப்ளை செய்வதில் தாமதம்

* வயதானவர்களுக்கு கைரேகை பதிவு பெறுவதில் சிக்கல்

* நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பு

வேலூர்: தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக் முறையால் சிக்னல், சர்வர் பிரச்னையால் ரேஷன் கடையில் பொருட்கள் சப்ளை செய்வதில் தாமதம் ஆகுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளை கூட்டுறவுத்துறை, நுகர்வோர் வாணிப கழகம், மீன்வளத்துறை, சுயஉதவிக்குழுக்கள் ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு திருச்சி, அரியலூர், நாகை, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு பயோ மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் முதலில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்யப்படும். அதன் பின்னர் பயனாளியின் கைரேகை பதிவு செய்யப்படும். ரேகை உறுதி செய்யப்பட்ட பின்பு அந்த ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை பதிவு செய்த பின்னர் தான் பொருட்களை தேர்வு செய்து பில் போடப்படும். இவைகள் அனைத்தும் முடிந்த பின்னரே பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனையாளர்கள் வழங்குவார்கள். இந்நிலையில் தற்போது சர்வர் பிரச்னை காரணமாக பயோமெட்ரிக் இயந்திரத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வயதானவர்களுக்கு கைரேகை பதிவு சரியாக பதிவு ஆகுவது இல்லை. இதனால் அவர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அடிக்கடி பயோமெட்ரிக் இயந்திரம் சர்வர் பிரச்னை காரணமாக ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பயோ மெட்ரிக் இயந்திரத்தை மாற்றிவிட்டு கண்விழி பதிவு முறையில் இயந்திரம் வழங்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இந்த பயோமெட்ரிக் இயந்திரத்தில் 4ஜி சிம்தான் போடப்படுகிறது. அந்த சிம்கார்டுக்கு டவர் சரியாக கிடைத்தால் மட்டுமே பயோமெட்ரிக் இயந்திரம் செயல்படும். தற்போது பிஎஸ்என்எல், ஏர்டெல் சிம்கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவை முழுமையாக பெறவில்லை.

நகர் பகுதிகளில் மட்டும் இயந்திரத்தில் உள்ள சிம்கார்டுகளுக்கு டவர் நன்றாக கிடைக்கிறது. அதனால் நகர்புறத்தில் சிக்னல் பிரச்னை கிடையாது. ஆனால் கிராமப்புறங்களில் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் உள்ள சிம்கார்டுகளுக்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்த இயந்திரம் செயல்படாத நிலை உருவாகிறது. அதற்காக விற்பனையாளர்கள் தங்களின் மொபைல் இன்டர்நெட்டை இயந்திரத்திற்கு பயன்படுத்தி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதனால் அவர்கள், சிம்கார்டுகளுக்கு நெட் கார்டுகளை விற்பனையாளர்களே தங்கள் சொந்த செலவில் ரீசார்ஜ் செய்கின்றனர்.இந்த பிரச்னைகளை எல்லாம் விற்பனையாளர்கள் கடந்து சென்றால் பெரிய பிரச்னையாக சர்வர் பிரச்னை உள்ளது. பெரும்பாலான நேரங்களில் சர்வர் சரிவர இயங்கவில்லை. இதன் காரணமாக ஒரு நபருக்கு பொருட்கள் கொடுக்கவே 15 நிமிடங்களுக்கும் மேலாகிறது.

முழுமையாக சர்வர் பிரச்னை ஏற்பட்டால் பயோ மெட்ரிக் முறையில கைரேகை பதிவு செய்யும் முறையையே கடக்க முடியாது. இதனால் தேவையற்ற காலவிரயம் ஏற்பட்டு, பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக தங்களை மணிக்கணக்கில் காக்க வைக்கப்படுவதாக பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே தேவையற்ற தகராறு அடிக்கடி ஏற்படுகிறது. பயோ மெட்ரிக் முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை களையாமல் தமிழக அரசு அலட்சியமாக இருப்பதால் விற்பனையாளர்கள் தினம் தினம் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தமிழக அரசு பயோமெட்ரிக் முறையில் உள்ள சர்வர் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். எந்த நிறுவனத்தின் 4ஜி சிம்கார்கார்டுகள் எந்தெந்த பகுதியில் டவர் கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ற நிறுவனங்களின் சிம்கார்டுகளை பயோமெட்ரிக் இயந்திரத்திற்கு வழங்க வேண்டும். இல்லையெனில் விற்பனையாளர்களுக்கு தங்கள் மொபைல்களில் நெட்கார்டுகள் போடுவதற்கு தனியாக பணம் தர வேண்டும். அப்போது தான் விற்பனையாளர்கள் விரைந்து பணி செய்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: