டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு பொறுப்பேற்று வெள்ளை மாளிகையின் 3 முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு பொறுப்பேற்று அமெரிக்க வெள்ளை மாளிகை இணை ஊடக செயலாளர் சாரா மேத்யூஸ் உள்ளிட்ட 3 முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் சாரா மேத்யூஸ் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் நிர்வாகத்தில் பங்கேற்று கொள்கைகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்ததில் மிகவும் பெருமை அடைவதாகவும், நாடாளுமன்றத்தில் சிலரது மோசமான நடவடிக்கையினால் தற்போது தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு பொறுப்பேற்று தனது வெள்ளை மாளிகை இணை பத்திரிக்கை செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, நாடு அமைதியான மாற்றத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் சாரா மேத்யூஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதேபோன்று மெலானியா டிரம்ப்பின் ஊடக செயலாளர் ஸ்டெபானி கிரிஷ் என்பவரும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் 2015ம் ஆண்டு முதல் மெலானியா நிர்வாகத்தில் பணியாற்றி வந்தவர். இதேபோல வெள்ளை மாளிகையின் சமுதாய செயலாளர் ரிக்கி நிசெட்டாவும் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு ஒரே நேரத்தில் 3 பேர் டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு பொறுப்பேற்று நிர்வாகத்தில் இருந்து விலகுவது இதுவரை இல்லாததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: