பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் ரேடார் கண்டு பிடித்ததால் 3 ஆண்டுகளுக்கு முன் விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்: இஸ்ரோ விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானி தபன் மிஸ்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு டிரியோக்சைடு ரசாயன விஷம் கொடுக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார். கடந்த  2017ம் ஆண்டு மே 23ம் தேதி,  பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராடார் மூலம் செயற்கைக்கோள் படம் எடுக்கும் உயரிய தொழில் நுட்பத்தில் என்னுடைய பங்களிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்கலாம். ஏனெனில், இந்த தொழில் நுட்பத்தின் மூலம், இரவு-பகல் உள்ளிட்ட எந்த சூழலிலும் பூமியின் மேற்பரப்பை தெளிவாக படம் எடுக்க முடியும். உள்நாட்டு தயாரிப்பான இந்த ராடாரை, வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டும் என்றால், 10 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது இருந்திருக்கும்.

இந்த ராடார் சிஸ்டம் பனி, மேக மூட்டம், தூசி உள்ளிட்ட எந்த சூழலையும் தெளிவாக படம் எடுக்க கூடியது என்பதால் ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற ஒன்றை நாம் உள்நாட்டிலேயே தயாரிப்பதனால், வெளிநாட்டுக்கு இந்திய அரசிடம் இருந்து கிடைக்கும் ஆர்டர்கள் ரத்தாகும் வாய்ப்புள்ளதால், எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நான் ஓய்வு பெற்ற பின்பே, இது குறித்த தகவல்களை வெளியிடுவேன் என்று குற்றவாளிகள் கருதி இருக்கலாம் என்றார்.

Related Stories: