அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்திருந்தாலும், பருவமழை அடுத்த வாரம் வரை தொடரும் என்று ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர் உள்பட சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., தாம்பரம் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, கிண்டி, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: