ஓசூர் அருகே 70 யானைகள் முகாம்-கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர் : ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் 100க்கும் மேற்பட்ட யானைகள் வருவதும், செல்வதுமாக உள்ளது. இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தற்போது, சானமாவு வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன.

வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உணவு தேடி கிராம பகுதிகளுக்கு வருவதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சானமாவு வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் தென்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாட வேண்டாம். சானமாவு வனப்பகுதியில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் எச்சரிகையுடன் சென்று வர வேண்டும். யானைகள் நடமாட்டம் குறித்து தெரிந்தால் வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: