வில்லியம்சன் 238, நிக்கோல்ஸ் 157, டாரில் மிட்செல் 102* நியூசி. 6 விக்கெட்டுக்கு 659 ரன் குவித்து டிக்ளேர்: தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்

கிறைஸ்ட் சர்ச்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் கேப்டன் வில்லியம்சன், நிக்கோல்ஸ், டாரில் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச... பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அசார் அலி 93, கேப்டன் ரிஸ்வான் 61, பாஹீம் அஷ்ரப் 48, ஜாபர் கோஹர் 34, அபித் அலி 25 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் ஜேமிசன் 5 விக்கெட் அள்ளினார். சவுத்தீ, போல்ட் தலா 2, ஹென்றி 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்திருந்தது. கேப்டன் வில்லியம்சன் 112 ரன், நிக்கோல்ஸ் 89 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் 4வது விக்கெட்டுக்கு 369 ரன் சேர்த்து அசத்தினர். நிக்கோல்ஸ் 157 ரன் (291 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அப்பாஸ் பந்துவீச்சில் நசீம் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த வாட்லிங் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, வில்லியம்சன் - டாரில் மிட்செல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்தது. இரட்டை சதம் விளாசிய வில்லியம்சன் 238 ரன் எடுத்து (364 பந்து, 28 பவுண்டரி) பாஹீம் பந்துவீச்சில் ஷான் மசூத் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. டாரில் மிட்செல் 102 ரன் (112 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேமிசன் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் ஷா, அப்பாஸ், அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 362 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 8 ரன் எடுத்துள்ளது. 25 பந்துகளை சந்தித்த ஷான் மசூத் டக் அவுட்டானார். அபித் அலி 7 ரன், அப்பாஸ் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 354 ரன் தேவை என்ற கடுமையான நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணி இன்று 4ம் நாள் சவாலை எதிர்கொள்கிறது.  

* டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் தனது 4வது இரட்டைச் சதத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக, இலங்கைக்கு எதிராக 242* ரன் (2015), வங்கதேசத்துக்கு எதிராக 200* ரன் (2018), வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 251 ரன் விளாசி இருந்தார் (2020). இந்த 4 இரட்டை சதங்களையும் அவர் சொந்த மண்ணில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* வில்லியம்சன் - நிக்கோல்ஸ் இணை 4வது விக்கெட்டுக்கு சேர்த்த 369 ரன், நியூசிலாந்து அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 1991ல் இலங்கைக்கு எதிராக  மார்ட்டின் குரோவ் - ஆண்ட்ரூ ஜோன்ஸ் 3வது விக்கெட்டுக்கு 467 ரன் குவித்தது முதல் இடத்திலும், டெர்ரி ஜார்விஸ் - கிளென் டர்னர் இணை வெஸ்ட் இண்டீசுக்கு  எதிராக 387 ரன் சேர்த்தது (1972) 2வது இடத்திலும் உள்ளது.

* டெஸ்ட் போட்டியில் டாரில் மிட்செல் தனது முதல் சதத்தை விளாசியுள்ளார். இதற்கு முன்பு, இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் 73 ரன் அடித்ததே அவரது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

Related Stories: